உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் விவகாரம் தொடர்பில் தியாகராஜா- பெற்றோர்கள் பேச்சுவார்த்தை: நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்கும் வகையில்  கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழு தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர் தியாகராஜாவினை நேற்றுத் திங்கட்கிழமை(12) முற்பகல்-10.30 மணியளவில் வட்டுக் கோட்டையிலுள்ள ஆயர் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.  

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்கும் வகையில் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்துப் புதிய நிர்வாகக் குழுவொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் நடவடிக்கையாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரியை முகாமைத்துவம் செய்து வரும் தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர்  தியாகராஜாவைச் சந்திக்க முற்பட்ட போதும் பலனளிக்கவில்லை. ஆயர் உறக்கத்திலிருப்பதால் சந்திக்க முடியாதெனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் நேற்றைய சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

நேற்றைய சந்திப்புக் காலை-09.30 மணிக்கு இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் 10.30 மணி வரை பெற்றோர்கள் குழு காத்திருக்க வேண்டியேற்பட்டது. மேற்படி சந்திப்பில் முன்னாள் அதிபரான சிரானி மில்ஸ் மேலும் இரு  வருடங்களுக்கு அதிபர் பதவியில் நீடித்தல், மாணவிகள் மீது வன்முறை புரிந்த ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல், நீதிக்காகப் போராடிய மாணவிகள் புதிய கல்லூரி நிர்வாகத்தால் பழிவாங்கப்படக் கூடாது போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகள் பெற்றோர்கள் தரப்பால் முன்வைக்கப்பட்டதுடன் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. 

இதன் போது பெற்றோர்கள் தரப்பால் முன்வைக்கப்பட்ட முதன்மையான மூலக் கோரிக்கையான சிரானி மில்ஸ் அம்மையாரைத் தொடர்ந்தும் இரு வருடங்களுக்குப் பதவியில் நீடிக்கச் செய்தல் எனும் கோரிக்கையை ஆயர் நிராகரித்து விட்டார். நிர்வாக ரீதியான, சட்ட பூர்வமான சாத்தியப்பாடுகள் எதுவுமில்லை என ஆயர் விளக்க முற்பட்ட போது இருதரப்புக்குமிடையே கடுமையான வாக்கு வாதங்கள் நடைபெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து சாதகமான முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் குறித்த சந்திப்பு முடிவடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதன் போது ஆயர் தரப்பைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பெற்றோர்கள் குழுவைப் பார்த்து அடிக்கடி மிரட்டும் வகையிலான சைகைகளைக் காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.