பெங்களூரில் தமிழர்கள் மீது பாரிய வன்முறை: வாகனங்கள் தீக்கிரை

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் மற்றும் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதால்  மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. 

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட செயல்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் வன்முறையால் இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழ் இளைஞர் ஒருவரை கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பெங்களூருவில் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்கள், ஹோட்டல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பெங்களூருரில் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல்கள் சுமார் 30 பகுதிகளில் இயங்குகின்றன. 

இதில் மைசூர் ரோடு- சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் மீது 50 பேருக்கும் மேற்பட்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் கண்ணாடிகள் நொறுங்கியது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதேபோல இந்திராநகர் பகுதியில் பூர்வீகா செல்போன் ஷோரூம் மீதும் கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

திங்கள்கிழமை மாலையில் மட்டும்  தமிழக பதிவு எண் கொண்ட 50 தனியார் பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன.

கொளுத்தப்பட்ட தனியார் பேருந்துகள்!

பெங்களூருவிலிருந்து 17 கி.மீ தொலைவில், கெங்கேரியில் உள்ள தனியார் பேருந்துகள் பணிமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகள் கன்னட இனவெறியர்களால் கொளுத்தப்பட்டு இருக்கின்றன. கொளுத்தியவர்கள், ‘‘நாங்கள் எங்கள் ரத்தத்தைக் கொடுப்போம்... ஆனால், காவிரியை அல்ல...’’ என்று கோஷமிட்டுக் கொண்டே கொளுத்தியதாக அந்தப் பகுதியில் இருந்த செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் திங்கள்கிழமை முழுவதும் கர்நாடக மாநிலத்தில், மாண்டியா, மைசூரு, சித்திரதுர்கா, தர்வாத் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு இருக்கின்றன. அதுபோல, தமிழர்களின் கடைகளும் அதிக அளவில் தாக்கப்பட்டு இருக்கின்றன.  குறிப்பாக மாண்டியா பகுதியில்தான் அதிக அளவில் வன்முறை வெடித்து இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டவபுரா பகுதியில் தமிழர்களின் வீடுகளும், கடைகளும் தாக்கப்பட்டு இருக்கின்றன. சாம்ராஜ் நகரிலும் தமிழர்களின் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கின்றன.

‘‘வன்முறை அதிக அளவில் வெடித்துள்ளதால், பெங்களூரு பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அங்கு தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது’’ என்கிறார்கள் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள்.

மாலை 4.30 முதல் 8.10  வரை:

4.30: சத்தியமங்கலம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட லாரிகள் தும்காரா பகுதியில் தாக்கப்பட்டு இருக்கின்றன.

5.30: கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் கைதுசெய்யப்பட்டு இருப்பதாகக் கன்னட உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.

5.40: கே.ஆர் மார்க்கெட், கலாசிபால்யா மற்றும் ஜே.சி சாலையில் உள்ள பல கடைகள் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அடைக்கப்பட்டன.

7.00: தமிழக பதிவு எண் கொண்ட 50 தனியார் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

7.45: கர்நாடக முதலவர் நாளை காலை 11 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.

8.10: அமெரிக்கா அட்வைசரி, பெங்களூருவில் உள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.