பாடசாலையையோ, திருச்சபையையோ அரசியலில் எடுத்துக் கொள்வது உகந்ததல்ல: தியாகராஜா மழுப்பல்

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் பிரச்சினை  தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள நிலையில் பாடசாலையையோ அல்லது எம் திருச்சபையையோ அரசியலில் எடுத்துக்கொள்வது உகந்ததல்ல எனத் தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர் டீ.எஸ். தியாகராஜா மழுப்பலாகத் தெரிவித்துள்ளார். 

நேற்று திங்கட்கிழமை(13)பிற்பகல்-04 மணியளவில் யாழ்.வட்டுக்கோட்டை ஆயர் இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. 

இதன் போது அவர் மேலும் தெரிவித்த விடயங்களும் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே அமைந்திருந்தது. 

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை நடைபெற்று ஓரளவு ஓய்வடைந்த நிலையில் மீண்டும் கிளர்ந்த சர்ச்சை எனத் தற்போதைய சூழலை வர்ணித்திருந்த தியாகராஜா இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

இதுவரை காலமும் அதிபராக பதவி வகித்துவந்த சிராணி மில்ஸ் எனும் ஆசிரியைக்கு 60 வயது நிறைவடைவதால் அவருக்கு ஓய்வு வழங்க பாடசாலை நிர்வாகம் முடிவு செய்தது இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்ததும் அதனைத் தொடர்ந்து பல சம்பவங்கள் நடைபெற்றதும் யாவரும் அறிந்ததே. 

அதாவது இங்கே நடைபெற்றது உண்மையை மறைத்தல் அல்லது மூடுதல் என்ற செயற்பாடே என அவர் ஆரம்பப் பேச்சில் கூறினார். தொடர்ந்தும் இத்தினத்தில் பிரியாவிடை என்றால் விலத்துவது கடமை, புது அதிபரை வரவேற்பது வழமை.  இங்கு எல்லாம் புறம்பாகவே நடைபெற்றது எனவும் அவர் குறிப்பிட்டார் .

அத்தோடு ஆயர் பழைய அதிபருக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானது இதுவரையில் நடைபெற்ற கணக்குகள் தொடர்பான குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருந்த  முறையில் காணாமல்போயுள்ளதாக குறிப்பிட்டார் .

மேலும் பாடசாலை வளாகத்தினுள் பாடசாலை நிர்வாகம் பொலிஸாரினை அழைக்கவில்லை, அவர்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

பாடசாலையையோ அல்லது எம் திருச்சபையையோ அரசியலில் எடுத்துக்கொள்வது அவ்வளவு உகந்தது அல்ல. இந்தச் சம்பவத்தில் பொய் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை எனவும் நாக்குக் கூசாமல் சொல்லி முடித்தார் தியாகராஜா.