தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணை

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தின் எதிரொலியாகத் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் சு. நிஷாந்தன் சுன்னாகம் பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை(12) மாலை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  

இன்று பிற்பகல்-02.30 மணியளவில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பாக உங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளார் எனத் தெரிவித்ததற்கமைய தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 

போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்கு முன்பாக நின்ற போது பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள், மற்றும் வீடியோ எடுத்த நிலையில் குறித்த பொலிஸாருக்கு எதிராகவோ, அல்லது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளைக் காலால் எட்டி உதைத்த சாம் டானியல் உள்ளிட்ட ஆசிரியர்களோ, மாணவிகளுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் மீதோ இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத  நிலையில் கல்லூரி மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டேறித்தனமான தாக்குதல்களைத் தடுக்க முற்பட்ட தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவரும் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் அவர் மீதான விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான பின்னணி என்ன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.