யாழில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் பெண்ணின் கை துண்டானது

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவரின் கை துண்டானதுடன் பலர் படுகாயமடைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளுடன் பயணித்த பஸ் வண்டியும் கொழும்பிலிருந்து எண்ணெய் பரல்களை ஏற்றி வந்த லொறியும் மோதியதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த மற்றையவர்கள் அநுராதபுரம் மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.