துப்பாக்கியால் இளைஞர்களை மிரட்டி யாழ் திரையரங்கில் திடீர் ஹீரோவான தமிழ் உதவிப் பொலிஸ் பரிசோதகர்

யாழ்ப்பாணத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் முறைகேடான முறையில் பின்கதவால் நுழைவுசீட்டு விற்றதனை தட்டிக்கேட்ட இளைஞர்களை உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியை தூக்கிக் காட்டி  கைது செய்வேன் என மிரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது.  

யாழில் உள்ள திரையரங்கு ஒன்றில் புதிதாக திரைக்கு வந்துள்ள திரைப்படம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.

குறித்த திரைப்படத்தை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பலர் வரிசையில் காத்திருந்த நிலையில் குறித்த திரையரங்கில் நுழைவு சீட்டு விற்கும் ஊழியர்கள் பின் கதவினால் நுழைவு சீட்டின் விலையை விட நூறு ரூபாய் அதிகமாக கூட்டி விற்பனை செய்தனர்.  இதனை வரிசையில் நின்ற இளைஞர்கள் அவதானித்து அது தொடர்பில் ஊழியர்களுடன் வாக்குவாதப்பட்டனர். 

அதன் பின்னர், ஊழியர்கள் பின் கதவால் நுழைவுச் சீட்டு விற்பதனை நிறுத்தினர்.  அதன் பிற்பாடு ஊழியர்களுடன் வாக்குவாதப்பட்ட இளைஞர்கள் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு திரையரங்கினுள் செல்வதற்குச் சென்ற போது குறித்த இளைஞர்களை ஊழியர்கள் திரையரங்கினுள் விடாது தடுத்து நிறுத்தினர்.  ஊழியர்கள் தடுத்ததையும் பொருட்படுத்தாது, இளைஞர் குழு  திரையங்கினுள் சென்று உட்கார்ந்தனர்.

அந்நேரம் அங்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த தமிழ் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிவில் உடையில் தனது பின் பக்கமாக கைத்துப்பாக்கியை செருகிய நிலையில், திரையரங்கினுள் நுழைந்து ஊழியர்களுடன் வாக்குவாதப்பட்ட இளைஞர்களை திரையரங்குக்கு வெளியில் அழைத்தார்.

 அங்கு வைத்து இளைஞர்களுக்கு துப்பாக்கி காட்டி உங்களை கைது செய்ய போகிறேன் என மிரட்டி உள்ளார். 

இருந்த போதிலும் இளைஞர்கள், தமது நியாயத்தை எடுத்துக்கூறி இதற்கு மேலும் நீங்கள் கைது செய்வது என்றால் கைது செய்யுங்கள் என கூறினர்.  அதனை தொடர்ந்து குறித்த உதவி பொலிஸ் பரிசோதகர், இது உங்கள் தியேட்டர் இல்லை, இங்குள்ளவர்கள் தாம் விரும்பிய படி விரும்பியவர்களுக்கு ரிக்கெட் விற்பார்கள். அதனை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்களை இவர்கள் வாருங்கள் என அழைத்து படம் காட்டவில்லை. 

விரும்பினால் வந்து பாருங்கள் இல்லை எனில் வேறு தியட்டருக்கு சென்று படம் பாருங்கள். என மிரட்டி வெட்டி நியாயம் பேசி உள்ளார்.  அத்துடன் இப்ப உள்ளே போய் படத்தை சத்தம் போடாமல் பார்த்து விட்டு போக வேணும். இல்லை எனில், உங்களை நான் கைது செய்வேன். என துப்பாக்கியை காட்டி மிரட்டி தென்னிந்திய சினிமாப் பாணியில் தனது ஹீரோயிசத்தைக் காட்டி உள்ளார்.