உடுவில் மாணவிகளின் பெற்றோர்கள் கூட்டத்திற்கு நெருங்கிய சகாவைத் தூதனுப்பிய தியாகராஜா

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்கும் வகையில் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்துப் புதிய நிர்வாகக் குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) மாலை தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

மேற்படி கல்லூரி மாணவிகள் ஆரம்பித்த போராட்டம் ஆசிரியர்களாலும், தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர் தியாகராஜாவிற்கு நெருக்கமானவர்களாலும் திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன, இதன் போது மாணவிகளின் பெற்றோர்கள் மீது கடும் வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான முக்கிய கூட்டமொன்று நேற்று மாலை சுன்னாகத்திலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மேற்படி பிரச்சினையைக் கையாள்வதற்காக மாணவிகளின் பெற்றோர்களை உள்ளடக்கிய புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றிருந்தது. 

குறித்த கூட்டத்திற்குத் தனது நெருங்கிய சகாவான சுன்னாகம்  ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் ஆசிரியரொருவரைத் தூதனுப்பிய தியாகராஜா அங்கு என்ன நடக்கிறது? எனப் பார்த்து வருமாறு கட்டளையிட்டுள்ளார். குறித்த நபர் கூட்டம்  முடிவடையும் தறுவாயிலேயே பிற்பகல்-06.30 மணியளவில் அங்கு வந்துள்ளார். 

மேற்படி நபர் ஆயர் இல்லத்திலிருந்து தான் நான் தற்போது வருகிறேன். நான் ஆயரைச் சந்திக்க உடனடி ஏற்பாடு செய்து தருவதாகவும் முன்னர் கூறிய போதும் பின்னர் ஆயருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் ஆயரை நீங்கள் சந்திக்க முடியாது..... அவர் தற்போது பளையில் நிற்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். 

தியாகராஜாவின் கபட நோக்கத்தை உணர்ந்து கொண்ட மாணவிகளின் பெற்றோர்கள் பின்னர் நேற்றிரவு-09.30 மணிக்கு ஆயரைச் சந்திப்பதற்காக வட்டுக் கோட்டையிலுள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்ற போது அவர் தற்போது உறக்கத்திலிருப்பதால் அவரைச் சந்திக்க முடியாதென அவரது உதவியாளர் மூலம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.