உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரத்தைத் தொடர்ந்தும் கையாள்வதற்குப் புதிய வியூகம்

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரத்தைத் தொடர்ந்தும் கையாள்வதற்காகக்  குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்துப் புதிய நிர்வாகக் குழுவொன்று நேற்று  ஞாயிற்றுக்கிழமை(11-09-2016) தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டமையும், அதற்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்வதற்கான முக்கிய கூட்டமொன்று சுன்னாகத்தில் அமைந்துள்ள திசா ரெஸ்ற் விடுதியில் நடைபெற்றது. 

இந்தக் குழுவின் தலைவராக சி. எ. தயாபரன், செயலாளராக க. வேல்தஞ்சன், பொருளாளராக ப. நந்தீஸ்வரன், உப தலைவராக திருமதி ச. கெளரிதரன், உபசெயலாளராக தனஞ்சயன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாக திருமதி- கிருபா ஞானசுதன், திருமதி- கிருபாகரன், திவாகரன், சிவபாலசுப்பிரமணியம், கமலநாதன், சி. உதயகுமார், ரி. கணேஸ்வரன், இந்திரபாலா,  கே. ஸ்ரீதரன், வாசுகி, மகேந்திரராஜ், கு. சகுந்தலா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். 

முன்னாள் அதிபரான சிரானி மில்ஸ் மேலும் இரு  வருடங்களுக்கு அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும், மாணவிகள் மீது வன்முறை புரிந்த ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல், நீதிக்காகப் போராடிய மாணவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்தல் ஆகிய மூன்று முக்கிய தீர்மானங்களை அடிப்படையாக முன்வைத்து இந்தக் குழு செயற்படஉள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் கடும் மன உளைச்சல்களுக்கு உட்பட்டிருப்பதால் அவர்களை மேலும் மன உளைச்சல்களுக்கு உட்படாமல் பாதுகாக்கவும் இந்தக் குழு தீவிர நடவடிக்கைகளில் இறங்கவுள்ளது.