அக்காவின் உயிரைப் பறித்த தங்கையின் விளையாட்டு!- யாழில் விபரீதம்

யாழ்ப்பாணம்-நெல்லியடி புன்னாலை பிரதேசத்தில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி கடந்த 9ஆம் திகதி பாடசாலை விட்டு வீடு வந்தவுடன் தனது தங்கமாலையை கழற்றி கட்டில் மேல் வைத்து விட்டு குளிப்பதற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து இவரது இளைய சகோதரி விளையாட்டுக்காக தனது அக்காவின் தங்கமாலையை எடுத்து ஒளித்துள்ளார்.

குளித்து விட்டு வந்து தனது மாலையை தேடிய குறித்த மாணவி அதைக் காணாததால் மிகவும் பயத்துடன் இருந்துள்ள நிலையில், தங்கமாலையை எடுத்து ஒளித்து வைத்த தங்கை வெளிநாட்டில் உள்ள தனது தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி அக்கா மாலையை தொலைத்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களது தாய் குறித்த மாணவியை திட்டியதை அடுத்து குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.