மிரட்டிய அரசியல்வாதியின் உதவியாளர்!- உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்கு

பழைய அதிபரே தமக்கு வேண்டும் என்பதனை வலியுறுத்தி  போராட்டம் நடாத்திய மாணவிகள், பெற்றோர்கள், மதகுருமார்கள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் இன்று சந்தித்து பேசி உள்ளனர். 

உடுவில் மகளிர் கல்லூரிக்கு பழைய அதிபரே வேண்டும் என வலியுறுத்தும் பாடசாலை சமூகத்தின் போராட்டம் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து வருகின்றது. 

முதலமைச்சரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 

எங்களுக்கு பழைய அதிபரே வேண்டும். புதிய நிர்வாகத்தினர் போராட்டம் நடத்தியமைக்காக எம்மை துன்புறுத்துகின்றார்கள். எதிர்வரும் நாட்களில் நாம் கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அவர்கள் எம்மை நிச்சயம் தொடர்ந்து பழிதீர்ப்பார்கள். 

 அரசியல்வாதி ஒருவாின் உதவியாளர் என கூறும் நபர் ஒருவர் எம்மை நேரடியாக மிரட்டினார். 

போராட்டம் நடத்தியமைக்காக சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எம்மை நீதிமன்றுக்கு அழைப்போம் எனவும் மிரட்டினார்.

தன்னால் சட்டத்திற்கு உட்பட்ட ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதனை நிச்சயமாக எடுப்பேன் என முதலமைச்சர் உடுவில் மகளிர் கல்லூரி சார்பில் சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடம் உறுதியளித்தார்.