மாவீரர் துயிலுமில்லக் காணியில் இருந்து வெளியேறியது இராணுவம்

இலங்கையின் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லக் காணியில் இருந்து முதன்முறையாக இராணுவம் வெளியேறி உள்ளது. 

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல  காணி, இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்ப்பட்ட வன்னிவிளாங்குளம் சந்திப்பகுதியில் மாவீரர் துயிலுமில்ல காணி உள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், மாவீரர் துயிலுமில்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் இங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.

“துயிலுமில்ல காணியலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்” எனதொடர்ச்சியாக பல கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டன.

இறுதியாக இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறை விசாரணையின் போதும், “மாவீரர் துயிலுமில்ல காணியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்” என கோரியிருந்தனர்.

இந்நிலையில் இந்தக்காணி, உத்தியோகப்பூர்வமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.