தென்பகுதி இளைஞர்களுக்கு யாழில் பாடம் புகட்டிய வடக்கு முதல்வர்

மாணவ சமுதாயத்தினரிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உறுதுணையாக அமையக் கூடும் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. எனினும், இன்று இங்கே போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் தென்பகுதி இளைஞர் யுவதிகளிடம் ஒரு விடயத்தைத் தெரிவிக்கலாம் என எண்ணுகின்றேன். 

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் இற்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்விட பூமியாக இருந்து வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழர்கள் பலர் பௌத்தர்களாக இங்கு வாழ்ந்தார்கள். பின்னர் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறினார்கள் எனத் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க. வி. விக்கினேஸ்வரன். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் 28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா

 நேற்றுச் சனிக்கிழமை(10--09-2016)  காலை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

அண்மைக் காலங்களில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகளினால் இங்குள்ள மக்களின் வாழும் உரித்து கேள்விக்குறியாக மாற்றப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இங்குள்ள இளைஞர் யுவதிகள், மத்தியில் இருந்த அரசியல் தலைமைகளினதும், இங்கிருந்த முகவர்களினதும் அடக்கு முறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்தனர். அதன் விளைவாகவே கொடிய நீண்டகால யுத்தமொன்று வலுப்பெற்று எத்தனையோ ஆயிரக் கணக்கான உயிர்களைக் காவு கொண்டது.இந்த யுத்தம் யாரும் விரும்பி மேற்கொண்டதொன்றல்ல. 

தமது இனத்தைச் சேர்ந்த மக்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டு எந்த இள இரத்தமும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தம் கண்களுக்கு முன்பே தம் இன வயோதிப தாய், தந்தையர், சகோதர சகோதரிகள் இன்னல்படுத்தப்பட்டதை அவர்கள் 1958, 1961, 1977, 1983 போன்ற பல கலவரங்களின் போதும் கண்ணுற்றார்கள். 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டில் கண்ணுற்றார்கள். அத்துடன் பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து எமது மாணவர்கள் பெருவாரியாகப் பல்கலைக்கழகங்களினுள் நுழைவதைத் தடைப்படுத்தினார்கள். 

இவற்றைக் கண்டு மௌனிகளாக நிற்க இயலாத சந்தர்ப்பத்திலேயே போர் புரியவேண்டும் என்ற ஒரு கடுமையான முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். அவை இப்போது முடிந்துபோன கதைகள் என இன்றைய அரசியல் தலைமைகள் கூறுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று, இரண்டு என தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் தந்தையர் இதனை எவ்வாறு முடிந்துபோன கதைகள் என ஏற்றுக் கொள்வது? அவர்களின் உயிர்களின் இழப்புக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன.

நீங்கள் இந் நிகழ்வுகளுக்காக இங்கே வந்து தங்கியிருக்கும் மிகக் குறுகிய இந்த மூன்று நாட்களில் இங்குள்ள மாணவ, மாணவியரின், இளைஞர், யுவதிகளின் பழக்க வழக்கங்கள் அவர்களின் உபசரிக்கும் தன்மை சகோதரத்துவ நடத்தைகள் அனைத்தையுங் காண்பீர்கள். இவ்வாறு அனைத்து விடயங்களிலும் உங்கள் உறவுகளாக நண்பர்களாக உடன் பிறவா சகோதரர்களாக சகோதரிகளாக விளங்கக்கூடிய இப் பகுதி இளைஞர் யுவதிகளை கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் தங்கள் பிரதேசங்களில் சுயமாக வாழ அனுமதிப்பதில் தென் பகுதி மக்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கின்றன? அடக்கி ஆள வேண்டும் என்ற மனோ நிலையில் தென்பகுதித் தலைவர்கள் இன்னமும் இருப்பதன் சூட்சுமம் என்ன?

இவ் விடயத்தை நாம் பல ஆண்டுகளாக தென் பகுதி அரசியல் தலைமைகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இதுவரை எதுவித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் நடைபெறுவதாக இல்லை. ஒரு கையால் தருவது போல் தந்து மறு கையால் தட்டிப்பறிக்கின்ற கபட நாடகமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. பல வெளிநாட்டுத் தலைவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் இங்கு வருகின்றார்கள். எமது பிரச்சனைகளை கேட்டுத் தெரிந்து கொள்கின்றார்கள். நாம் பிரிவினை பற்றி பேசவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் எமது பகுதியில் சுயமாக சுதந்திரமாக சொந்த அடையாளங்களுடன் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நிலையை ஏற்படுத்தித் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அவர்களும் சர்வதேச அரங்கத்தில் நடைபெற்றுள்ள வேறு நாடுகள் சம்பந்தமான நிகழ்வுகளை மனதில் வைத்து எமது கோரிக்கை நியாயமானதே என்று கூறுகின்றார்கள்.

நாம் சொந்த மண்ணில் சுயமாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு அனுமதியுங்கள் எனக் கேட்டால் தென் பகுதித் தலைவர்கள் நாம் பிரிவினையைக்  கோருகின்றோம் என்ற தவறான தகவல்களை தென் பகுதிகளில் பரப்புகின்றார்கள். எம்மைத் தீவிரப் போக்குடையவர்களெனக் கூறுகின்றார்கள். இதனால் அப்பாவி சிங்கள மக்களும் எம் மீது ஆத்திரப்படுகின்றார்கள். எனவே தான் எமது நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி தென் பகுதி சிங்கள இளைஞர் யுவதிகளிடம் நேரடியாக எமது கருத்தை தெரிவிக்க விரும்புகின்றோம். நீங்கள் இவ் விடயங்களை உங்கள் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அயலவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்றார்.