முறைப்பாட்டை மீளப் பெறுமாறு உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளை வற்புறுத்திய சுன்னாகம் பொலிஸார்

அதிபரின் பதவி காலத்தை நீடிக்குமாறு வலியுறுத்தி யாழ். உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகள் ஐந்து நாட்களாகத் தொடர்ச்சியாக நடாத்தி வந்த கவனயீர்ப்பு போராட்டம் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாக மாறி வன்முறையாக மாற்றமடைந்தது. 

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (07) மதியம் கல்லூரிக்கு வருகை தந்த தென்னிந்தியத் திருச்சபைக்கு நெருக்கமானவர்களாலும் , கல்லூரியின் ஆசிரியர்களாலும் திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

மாணவிகள் மீது தாக்குதல் இடம்பெற்று கொண்டிருந்த வேளையில் மாணவிகள் கொடுமை அனுபவிப்பதை தாங்கிக் கொள்ள முடியாத கல்லூரியை சேர்ந்த ஆசிரியையொருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடசென்ற போது அவரது முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

பின்னர் கல்லூரியின் பழைய மாணவியும், தாக்குதலுக்கிலக்கான மாணவியொருவரின் தாயாரொருவருடன் சென்று மாணவிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சறுத்தல்கள் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாட்டை சுன்னாகம் பொலிஸார் ஏற்றுக் கொண்டு பதிவு செய்த போதும் உரிய சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என முறைப்பாட்டாளர் தரப்பினரால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்த பழைய மாணவி கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை(09) நின்ற சமயம் சென்ற சுன்னாகம் பொலிஸார் முறைப்பாட்டை மீளப் பெறுமாறு வற்புறுத்திய போதும் முறைப்பாட்டாளர் அதற்கு உடன்படவில்லை என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.