ரியூசன் முடித்து வீடு திரும்பும் மாணவிகளுடன் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காவாலிகள்: யாழில் சம்பவம்

தனியார் கல்வி நிறுவனம் முடித்து வீடு திரும்பிய மாணவிகளை இலக்கு வைத்து இரு காவாலிகளான இளைஞர்கள் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை(10) மாலை யாழில் இடம்பெற்றுள்ளது.

20 தொடக்கம் 25 வரைக்குட்பட்ட வயதுடைய  பலாலி வீதியில் யாழ். புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, உரும்பிராய் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவிகள் தமது கற்றல் நடவடிக்கையை முடித்த பின்னர் இறுதியாக  மாலை-06.30 மணிக்குள் வீடு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று மாலை தனியார் நிறுவனம் சென்று கல்வி பயின்ற பின்னர் தத்தமது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த மாணவிகளைக் குறிவைத்து மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்த இரு இளைஞர்கள் மாணவிகளைக் கண்டவுடன் மோட்டார்ச் சைக்கிளை இருபக்கமும் மாறி மாறிச் செலுத்தியதுடன் மாணவிகள் சிலரை அநாகரிகமான வார்த்தைகளாலும் தூஷித்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் மோட்டார்ச் சைக்கிளொன்றில் வந்த போதும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

குறித்த இளைஞர்களின் அநாகரிகமான செயற்பாட்டால் மாணவிகள் அச்சமடைந்த நிலையில் வீடு நோக்கிப் பயணித்ததை அவதானிக்க முடிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.  

மாணவிகள் தனியார் கல்வி நிறுவனம் முடித்து வரும் வேளையில் ஒரு சில இளைஞர்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் மேற்படி பகுதிகளிலுள்ள மக்கள் இது தொடர்பில் பொலிஸார்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.