இனி தமிழிலும் பொலிஸாரை அழைக்கலாம்!- இலங்கையில் முதன்முதலாக ஆரம்பம்

 தமிழ் மொழியில் அவசர பொலிஸ் அழைப்புகளை மேற்கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கைள அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இரவு  (09.09.2016) வவுனியாவில் இடம்பெற்றது. 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால்  அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் மொழியிலான அவசர பொலிஸ் அழைப்புகளை வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட பொதுமக்கள் 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னர்ர் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உதவிகளையும் முறைப்பாடுகளையும் செய்துகொள்ளமுடியும்.

பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் தொடர்பை விஸ்தரிக்கும் முகமாக இத்திட்டம் இலங்கையில் முதன் முதலாக வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிவில் பாதுகாப்புகுழுக்களின் பிரதிநிதிகள் சிலருக்கும் மேற்படி இலக்கத்திற்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு ஏற்ற தொலைபேசி சிம் அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், மத குருமார், வர்த்தக பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்று இருந்தனர்.