உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் விவகாரம்: சுமந்திரனின் வலைக்குள் யாழ்.பொலிஸார்

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு வலியுறுத்தித் தொடர்ச்சியாக நடாத்தி வந்த போராட்டம் கடந்த புதன்கிழமை(07) மதியம் தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர்   டீ.எஸ். தியாகராஜாவுக்கு நெருக்கமானவர்களாலும் , கல்லூரியின் ஆசிரியர்களாலும் திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களும் கல்லூரி ஆசிரியர்கள் சிலரால் மாணவிகள் மீது பிரயோகிக்கப்பட்டது. குறித்த சம்பவத்தை கடமையிலிருந்த பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் அன்றைய தினம் மாலை கல்லூரிக்கு வருகை தந்த யாழ். மாவட்டச் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெஸ்லஸ் தலைமையிலான பொலிஸ் உயரதிகாரிகளிடம் மாணவிகள் தம் மீது நடாத்தப்பட்ட கண்மூடித் தனமான தாக்குதல்கள்  தொடர்பில் தெரிவித்த போது அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை என மாணவிகளால் குற்றம் சாட்டப்படுகிறது. 

மாணவியொருவர் தனது தோள் மூட்டில் காணப்பட்ட காயத்தைக் காட்டி  "என்னை ஆசிரியரொருவர் நிலத்திலே தள்ளி விழுத்தியதுடன் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்கள்....." எனத் தெரிவித்த போது அதற்கு நக்கல் சிரிப்புச் சிரித்துக் கொண்டே பதிலளித்த யாழ். மாவட்டச் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் 'இதுவெல்லாம் காயமா.... சேர் சும்மா தொட்டிருப்பார்.... நீங்கள் விழுந்திருப்பீர்கள்' எனவும் பொறுப்பற்ற வகையில் பதிலளித்துள்ளார். 

மேலும், பாதிக்கப்பட்ட ஏனைய மாணவிகள் தெரிவித்த கருத்துக்களையும் அவர் உதாசீனம் செய்ததுடன், மாணவிகளின் முறைப்பாடுகளையும் ஏற்க மறுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(08) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மல்லாகம் மாவட்ட நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் கல்லூரியின் முன்வாசலால் கல்லூரிக்குள் செல்ல முற்பட்ட மாணவிகளை உள்ளே செல்ல விடாது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தடுத்ததுடன், அவர்களைக் கீழே தள்ளி விழுத்தித் தாக்கவும் முற்பட்டுள்ளனர். 

அத்துடன் கல்லூரிக்கு முன்பாக வீதியில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தரொருவரும், கல்லூரி வளாகத்தில் நின்ற வேறொரு பொலிஸ் உத்தியோகத்தரும் கல்லூரியின் வாசலுக்கு வெளியே நின்ற மாணவிகளைப் தமது கையடக்கத் தொலைபேசிகளில் பல்வேறு கோணங்களில் வீடியோ எடுத்ததுடன், புகைப்படங்களும் எடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தை அங்கு கூடியிருந்த பொதுமக்களும், மாணவிகளின் பெற்றோர்களும் தட்டிக் கேட்க முற்பட்ட போது அவர்களையும் அச்சறுத்தும் வகையில் பொலிஸார் புகைப்படம், வீடியோ என்பன எடுத்துள்ளனர். 

யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்திருந்த போதும், அதற்கான காணொளி ஆதாரங்களும், புகைப்பட ஆதாரங்களும், வாக்கு மூல ஆதாரங்களும் வலுவான நிலையிலுள்ள போது மாணவிகள் மீது தாக்குதல் நடாத்திய குற்றவாளிகள் மீது இதுவரை உரிய உடனடிச் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வியெழுப்பியுள்ள பல்வேறு தரப்பினரும், தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர்   டீ.எஸ். தியாகராஜாவிற்குக் கீழ் குறித்த சபையில் முக்கிய பதவி வகித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் அரசியல் செல்வாக்கு வலைக்குள் பொலிஸார் ஆட்பட்டிருப்பதாலேயே மேற்படி கல்லூரி மாணவிகள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக இதுவரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமைக்கான காரணமெனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.