யாழ் – இந்திய படகுச் சேவை விரைவில் ; அர்ஜுன தகவல்

தலைமன்னாரிற்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இதுவரை எந்தப் பேச்சுக்களுடம் இடம்பெறவில்லை என்று தெரிவித்த துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, யாழ்ப்பாணம் – இந்தியாவிற்கு இடையில் படகு அல்லது கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பேச்சு நடத்தப்படுவதாகவும் கூறினார்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டன் இன்று வடமாகாண ஆளுநர் பலிஹக்கார, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்படை உயரதிகாரிகள், கடல்வளத்துறை அதிகாரிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன் போது யாழ் மாவட்டத்தின் காரைநகர், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலங்களுக்கு காணப்படுகின்ற எலுவைதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற துறைகளின் கப்பற்துறை முகங்கள் மற்றும் சிறிய ரக இறங்குதுறைமுகங்கள் தொடர் அபிவிருத்திகள் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இராமேஸ்வரம் – தலைமன்னாரிற்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் பலதரப்பினர் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.

அவ்வாறு திட்டமொன்று உள்ளதா? என்பது குறித்து எனக்குத் தெரியாது.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கும், தென்னிந்தியாவிற்கும் இடையில் படகு அல்லது கப்பல் சேவை ஒன்றை நடத்துவதற்கான பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தீவுகளில் வாழும் மக்கள் பல ஆண்டுகாலமாக பல்வேறு இன்னங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து துறையில் அவர்களுக்கு எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லை.

தீவுகளில் வாழும் மக்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்குரிய அறிக்கைகளை இரண்டு வாரங்களில் கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றேன்.

இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரது கவனத்திற்கு கொண்டுவருவேன்.

கடந்த அரசாங்கத்தை விடயும் இன்றைய புதிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான சூழலை உருவாக்கிக்கொடுத்துள்ளது.

அதனூடாக நாட்டின் தேசிய பாதுகாப்பை மையப்படுத்திக்கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது – என்றார்.