யாழ்ப்பாணம் - 5341 ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயம்

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மட்டும் சுமார் 5 ஆயிரத்து 341.28 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயம்  உள்ளதாக யாழ். மாவட்டச் செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த நிலங்களுக்குச் சொந்தமான 8 ஆயிரத்து 525 குடும்பங்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருவதாகவும் அந்தப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வலி.வடக்கில் 24 கிராம சேவகர் பிரிவுகளின்; கீழ் 11 ஆயிரத்து 472 குடும்பங்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 459.3 ஏக்கர் நிரப்பரப்பு 1990 ஆம் ஆண்டுகளின் பின் உயர் பாதுகாப்பு வலயம என்ற போர்வையில் படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டது. 

இந்த நிலங்களுக்குச் சொந்தமான 9 ஆயிரத்து 968 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது இடங்களில் மீள்குடியேற அனுமதி கோரி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டு நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். 

இதேவேளை, ஆயதப் போராட்டம் முடிவுக்கு வந்து 7 ஆண்டுகளாகும் நிலையில் இதுவரை வெறும் ஆயிரத்து 118.2 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ஜே.235 - காங்சேன்துறை தெற்கில் 135.73 ஏக்கர், ஜே.236 - பளை வீமன்காமம் வடக்கில் 55.6 ஏக்கர், ஜே.238 - கட்டுவனில் 9 ஏக்கர், ஜே.240 -தென்னியமலையில் 26.1 ஏக்கர், ஜே.241 -வறுத்தளவிளானில் 132.78 ஏக்கர், ஜே.244 - வயாவிளான் கிழக்கில் 80.63 ஏக்கர், 

ஜே.246 -மயிலிட்டி வடக்கில் 8.3 ஏக்கர், ஜே.250 -தையிட்டி வடக்கில் 196.6 ஏக்கர், ஜே.252 -பலாலி தெற்கில் 187.17 ஏக்கர், ஜே.253 -பலாலி கிழக்கில் 159.5 ஏக்கர், ஜே.254 -பலாலி வடக்கில் 64.74 ஏக்கர் என பகுதி பகுதியாக மிகக் குறைந்தளவு நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 1443 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. 

எனினும் ஜே.226 - நகுலேஸ்வரம், ஜே.223 - காங்கேசன்துறை மேற்கு, ஜே.224 - காங்கேசன்துறை மத்தி, ஜே.242 - குரும்பசிட்டி, ஜே.243 - குரம்பசிட்டி கிழக்கு, ஜே.245 - வசாவிளான் மேற்கு, ஜே.247 - தையிட்டி கிழக்கு, ஜே.249 - தையிட்டி வடக்கு, ஜே.248 - மயிலிட்டி தெற்கு, 

ஜே.251 - பலாலி வடக்கு, ஜே.255 - பலாலி வடகிழக்கு, ஜே.256 - பலாலி மேற்கு போன்ற கிராம சேகவர் பிரிவுகளில் உள்ள காணிகள் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் இவ்வாறு விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் பருத்தித்துறை, மருதனார்மடம், சுன்னாகம், அளவெட்டி, உரும்பிராய், கோண்டாவில், மல்லாகம் போன்ற பகுதிகளில் உள்ள எவ்வித அடிப்படை வதிகளும் அற்ற அகதி முகாம்களில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் எனவும் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பெருமளவு மக்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.