மகனுக்கு கைகொடுக்க நினைக்கும் கார்த்திக்

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ‘கடல்’ படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னத்தால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருந்தாலும், இந்த படத்தின் மூலம் கௌதம் கார்த்திக் பரவலாக பேசப்பட்டார். தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க ஒப்பந்தமானார்.

அப்படி அவர் நடித்த எந்த படங்களும் சரிவர ஓடவில்லை. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த கௌதம் கார்த்திக், தற்போது நடித்து வரும் முத்துராமலிங்கம் படம் தனக்கு பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த படத்தை ராஜதுரை என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் தன் மகனை கைகொடுத்து தூக்கிவிடும் விதமாக இந்த படத்தில் கார்த்திக் நடிக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இளையராஜா-பஞ்சு அருணாச்சலம் கூட்டணியும் இப்படத்தில் இணைந்துள்ளதுதான்.

இவ்வளவு சிறப்பம்சங்களுடன் உருவாகும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.