ஜனாதிபதியை பெற்றோருடன் சந்தித்து நன்றி தெரிவித்தார் சிவராசா ஜெனீபன்

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை பொது மன்னிப்பின் கீழ்  விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனீபன் தனது குடும்பத்துடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலத்தில் அவரை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா ஜெனீபன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிபன், ஜனாதிபதியை தனது தாய் தந்தையர் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புவதாக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார்.

இந்நிலையிலேயே ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழாவிற்காக இன்று ஞாயி்ற்றுக்கிழமை முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை சிவராசா ஜெனீபன் தனது குடும்பத்துடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தனது விடுதலையை தேசிய நல்லிணக்கத்திற்கான அடையாளமாக சமுக அமைப்புக்கள் கருதி வரும் நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியி்டம் சிவராசா ஜெனீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நம்பிக்கை உறுதியளித்துள்ளார்.

அத்துடன் சிவராசா ஜெனீபனின் பெற்றோர் தம்மை போன்றே, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெற்றோர்களும் பிள்ளைகளின் விடுதலைக்காக ஏக்கத்துடன் காத்திருப்பார்கள் என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததுடன் தனது மகனை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.