கருணாசேன ஹெட்டியாரச்சி யாழ்ப்பாணத்துக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய, முப்படையினர் வசமுள்ள காணிகளின் விவரங்களைத் திரட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணிகளின் விவரங்கள் மற்றும் மீள்குடியமர்வும் அதனுடன் தொடர்புடைய விவரங்கள் என்பவற்றைத் திரட்டி ஒரு மாத காலத்தினுள் சமர்பிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பணித்திருந்தார். 

இதனை நேரடியாகச் சென்று திரட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி கட்டளை பிறப்பித்திருந்தார். இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் முப்படையினர் மற்றும் மீள்குடியமர்வுடன் தொடர்புடைய சகல தரப்புக்களுக்கும் பாதுகாப்பு அமைச்சினால் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

இதன் போது சகல தரவுகளும் மீளாய்வு செய்யப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே, ஜனாதிபதி மட்டத்தில் மீள்குடியமர்வு தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.