யாழ். வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் காத்திருந்த சடலம்!

குடும்ப வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.

முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சூசைராசா (வயது 56) என்பவரின் சடலமே வீட்டின் வறுமைச் சூழ்நிலையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக் கிடந்தது.

காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் கடந்த 20 ஆம் திகதி மரணமானார். மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

மரண விசாரணை முடிந்த பின்னரும் சடலத்தை உறவினர்களால் கொண்டு செல்ல முடியவில்லை. அவர்களிடம் பணம் இல்லாததால் இரு நாட்கள் வைத்தியசாலையில் சடலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

உறவினர்களிடம் கடன்பட்டே சடலத்தை அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சொந்த இடத்துக்குக் கொண்டு சென்றனர் என மேலும் தெரிய வந்தது.