ஓய்வு பெறும் எண்ணமில்லை: மீண்டும் களத்தில் இறங்குவேன்! பெடரர் உறுதி

விம்பிள்டன் ரெனிஸ் தொடரில் அடுத்த ஆண்டும் நிச்சயம் விளையாடுவேன். ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் உறுதியளித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற வரும் விம்பிள்டன் ரெனிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் கனடாவின் ரயோனிச்சிடம் 3-6, 7-6 (7-3), 6-4, 5-7, 3-6 என 5 செட்களில் கடுமையாகப் போராடி தோற்றார் பெடரர். இதன் மூலம் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

35 வயதாகும் பெடரர், 1999ல் இருந்து தொடர்ச்சியாக 65 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் களமிறங்கி விளையாடி வருகிறார். அரையிறுதியில் தோற்றதும் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெடரர் ‘விம்பிள்டன் மைய களத்தில் மீண்டும் விளையாடுவேன் என உறுதியாக நம்புகிறேன். அதை உங்களுக்கு தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு மீண்டும் வருவேன்’ என உறுதியளித்துள்ளார்.