மெஸ்ஸி இல்லை என்பதை நம்பவே கடினமாக உள்ளது: நண்பனுக்காக உருகும் நெய்மர்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இல்லாமல் கால்பந்து விளையாட்டு கால்பந்தாக இருக்காது என்று நெய்மர் கூறியுள்ளார்.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சிலியிடம் தோற்றது. இதனால் மிகவும் விரக்தியடைந்த மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமன்றி சக கால்பந்து வீரர்களையும் மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது.

இது தொடர்பாக பிரேசில் கால்பந்து வீரரும், பார்சிலோனா கிளப் அணியில் ஆடும் சக வீரருமான நெய்மர் கூறுகையில்,மெஸ்ஸி எடுத்துள்ள இந்த முடிவை நான் மதிக்கிறேன்.

ஆனால் அவர் இல்லாமல் கால்பந்து விளையாட்டு கால்பந்தாக இருக்காது. அவர் இல்லை என்பதை நம்பவே கடினமாக இருக்கிறது. அவர் அர்ஜென்டினா அணிக்கும், பார்சிலோனா அணிக்கும் பல சாதனைகளை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மெஸ்ஸி அர்ஜென்டினாஅணிக்காக 113 போட்டிகளில் விளையாடி 55 கோல்களை அடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.