நெடுந்தீவிலிருந்து வந்த அம்புலன்ஸ் நடுக்கடலில் பழுது

நோயாளியுடன் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கு வந்த படகு நடுக்கடலில் பழுதடைந்தது. வடக்கு மாகாண சபையால் சுமார் நான்கரைக் கோடி ரூபா செலவில் வழங்கப்பட்ட இந்தப் புதிய படகு 3 மாதங்களுக்கு உள்ளாகவே பழுதடைந்தமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது.


நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியலைக்கு மாற்றப்பட்டார். இதற்காக குறித்த நோயாளி அம்புலன்ஸ் படகு மூலம் கொண்டு செல்லப்பட்டார். குறிகாட்டுவான் நோக்கி சென்றுகொண்டிருந்த படகு நடுக்கடலில் பழுதடைந்து தத்தளித்து.


படகில் இருந்தவர்கள் உடனடியாக கடற்படையினருக்குத் தகவல் வழங்கினர். விரைந்து செயற்ப்பட்ட கடற்படையினர் தங்கள் படகின் மூலம் அம்புலன்ஸ் படகில் இருந்தவர்களைக் காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இதன் பின்னர் கியூமெடிக்கா அம்புலன்ஸ் படகு மூலம் பழுதடைந்த அம்புலன்ஸ் படகு நெடுந்தீவு இறங்குதுறைக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

பழுதடைத்த படகு நான்கரைக் கோடி ரூபா செலவில் வடக்கு மாகாண சபையால் 3 மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. இந்தப் புதிய படகு நடுக்கடலில் பழுதடைந்தமை அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதேவேளை அனலைதீவுக்கென சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடுக்கடலில் நீரில் மூழ்கியிருந்;தமை குறிப்பிடத்தக்கது.