ஆட்சி மாறியும் அகற்றப்படாத விளம்பர பலகைகள்

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலங்களில் பெயர் பலகைகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் செயற்பாடுகள் குறித்த பலகைகள் வைக்கப்படுவது முக்கியமாக பொதுமக்களுக்கான தகவல்களுக்கும் தொடர்பாடல்களுக்குமாகும்.  அவற்றில் பிழையான தகவல்களோ, அல்லது காலம் கடந்த அறிவிப்பு பலகைகளோ மக்களுக்கே அசௌகரியத்தை தரும். 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதன் ஒரு வருட பூர்த்தியும் கடந்த ஜனவரி எட்டு அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் தமது அரசியல் நோக்கத்திற்காக வைத்துச்சென்ற விளம்பர பலகைகள் பலவும் இன்னமும் அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றன. 

முன்னாள் ஆட்சியாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட வேளையில் அவர்களது முகங்கள் அமைந்துள்ள விளம்பர பலகைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்றும் அல்லது அவற்றை அகற்ற வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் அப்போது அறிவித்தல் விடுத்து பொலிஸாரால் அவை அகற்றப்பட்டன. 

பல மில்லியன் பணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. அதனை அன்றைய ஆட்சியாளர்கள் அகற்ற பின்னடித்தனர். குறிப்பாக வடகிழக்கில் யுத்தம் மற்றும் அரசியல் சார்ந்த பல விளம்பரபதாகைகள் இதன்போது அகற்றப்பட்டன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற நகரங்கள் அவ்வகை பதாகைகளா்ல மூடுண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டபோது அவரது முகங்களை மறைக்க தேர்தல் திணைக்களத்தின் அறிவிருத்தலின்படி பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் அன்று நீக்கப்படாத மறைக்கப்படாத பல விளம்பர பதாகைகள் இன்னமும் வடக்கின் பல இடங்களிலும் காணப்படுகின்றன. 

அதிலும் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் திணைக்களங்களிலேயே அதிகமும் முன்னாள் ஆட்சியாளர்களின் விளம்பர பதாகைகள் காணப்படுகின்றன. தற்போதும் ஜனாதிபதியாக மகிந்தவையும் தற்போதும் பொருளாதார அமைச்சராக பசிலையும் தற்போதும் வடக்கு ஆளுநராக சந்திரசிறியை மேற்குறித்த பதாகைகள் அறிவிக்கின்றன. 

தேர்தல் விதிகளை மீறிய இந்தச் செயற்பாடு இன்னமும் காணப்படுகின்றன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் பொது மக்களுக்குரிய தகவல்களை அறிவிக்கும் அலுவலக திணைக்கள அறிவிப்புப் பலகைகள் இன்னமும் முன்னாள் ஆட்சியாளர்களின் அரசியல் விளம்பரப் பதாகைகளாக காட்சியளிப்பது மிகவும் தவறான கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.