யாழில் மேலும் பல ஏக்கர் காணியை கையளிக்கும் நிகழ்வு

அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ளது.

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் நாளைய தினம் இவ்வாறு மக்களிடம் கையளிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மற்றும் பலாலி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும், வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வளலாய் கிராம அலுவலர் பிரிவு ஆகியவற்றில் அமைந்துள்ள காணிகள் மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்களிடம் காணிகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நாளை காலை 9.15க்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி மற்றும் வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிஹக்கார ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.