ஜீவா படத்தில் முதன்முறையாக பேயாகும் ராதாரவி

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களும், நடிகைகளும் பேயாக நடித்து வரும் சூழ்நிலையில், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராதாரவியும் முதன்முறையாக பேய் வேடத்தில் நடிக்கவுள்ளார்.

‘பிசாசு’, ‘அரண்மனை-2’ ஆகிய பேய் படங்களில் ராதாரவி நடித்து வந்தாலும் இதுவரை பேய் வேடத்தில் நடித்ததில்லை.

அட்லி தயாரிப்பில் இயக்குனர் ஐகே ராதா இயக்கி வரும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ என்கிற படத்தில்தான் ராதாரவி முதன்முதலாக பேய் வேடத்தில் நடிக்கிறார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அட்லி தயாரிப்பில் முதன்முதலாக உருவாகும் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. தற்போது ராதாரவி இப்படத்தில் பேயாக நடிப்பதாக வெளிவந்த செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராதாரவி நடிப்பில் வெளியாகும் படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது. இப்படத்திலும் அவரது வித்தியாசமான நடிப்பு பெரிதளவில் பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.