கீர்த்தி சுரேஷுக்கு தாய்மாமனாக மாறிய தம்பி ராமையா

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு தாய்மாமனாக தம்பி ராமையா நடித்து வருகிறார்.

‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தனுஷுடன் இவர் நடித்துள்ள ‘தொடரி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘விஜய் 60’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை பரதன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தாய்மாமனாக தம்பி ராமையா நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் தம்பி ராமையா, இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது வழக்கமான நகைச்சுவை பாணி நடிப்பை இந்த படத்திலும் அவர் வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த ‘ஜில்லா’, ‘புலி’ ஆகிய படங்களில் காமெடி வேடத்தில் நடித்த தம்பி ராமையா தற்போது மீண்டும் விஜய் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.