சனல் 4 யாழ்ப்பாணத்திற்கு

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் சனல்4 இன் ஊடகவியலாளர் ஜோன் ஸ்நொவ் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் 

உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வு மிகவும் இரகசியமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேர்வேயின் காலி இலக்கிய விழா எனும் நிகழ்வு வழமையாக காலி கோல்பேஸ் கடற்கரையில் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வே எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதிகளில் யா.பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. சனல்4 இன் ஊடகவியலாளர் இந்நிகழ்விலேயே கலந்து கொண்டு உரையாற்றவும் உள்ளார்.

நிகழ்வில் கலந்து கொள்ளும் சனல்4 இன் ஊடகவியலாளர் ஜோன் ஸ்நொவ் பத்திரிகைத்ததுறையின் பொற்காலம் எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார். மேலும் சனல்4 இன் ஊடகவியலாளர் இலங்கையின் எப்பாகத்திற்கும் செல்வதற்கான அனுமதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

யாழ்ப்பாணத்தில் இவ்விழா நடத்தப்படுவதற்கான காரணம் இது வரை ஏற்பாட்டளர்களால் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக போரின் போது இலங்கை அரசினதும், அதன் படைகளினதும் போர்க்குற்றங்களை சனல்4 ஊடகம் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் மேலும் சனல்4 ஊடகத்திடம் உள்ளதாக நம்பப்படும் நிலையில், இலங்கை அரசு அவ்வூடகத்தினை நிகழ்வொன்றிற்கு அழைத்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

போருக்கு பின்னரான சூழ்நிலையிலும், புதிய அரசாங்கத்தின் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வடக்கில் சுமூகமான நிலைமைகள் உள்ளன என்பதனை காட்டுவதற்காகவே சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.