முல்லையில் சுழன்றடிக்கும் காற்றால் மக்கள் அவதி

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காலநிலை நிலவும் எனவும் அது தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் நாட்டில் காற்று வீசுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காற்றின் வேகத்தால் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக அளம்பில், செம்மலை, சிலாவத்தை, கள்ளப்பாடு, முல்லைத்தீவு நகர் முள்ளிவாய்க்கள், இரட்டைவாய்க்கால், மாத்தளன், போன்ற கரையோரப்பகுதிகயில் பலமாக காற்று வீசியதால் பொதுமக்களின் தற்காலிக குடிசைகள் பாதிப்படைந்துள்ளன.

இதேநேரம் முள்ளியவளையில் A34 வீதியோரம் நின்ற 120 வயது மதிக்கத்தக்க பெரிய வேப்பமரம் ஒன்று காறின் வேகத்தால் குடசாய்ந்து விழுந்துள்ளது. மரத்திற்கு அருகிலிருந்த தற்காலிக வீடு ஒன்று சேதமாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த முதியவரான வடிவேலு சிவகங்கை (74) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதேவேளை A34 36 கிலோமீற்றர் தூரத்தில் வீதியை மறித்து மரம் ஒன்று விழுந்துள்ளது. இதனை அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.