பணப்பையைத் திருடிய நபர் விபத்தில் சிக்கினார்! யாழில் சம்பவம்

பெண்ணொருவரின் பணப்பையை பறித்து சென்ற நபர் வீதியின் மஞ்சள் கடவையால் சென்ற நபரை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் யாழ்.மருதனார்மடம் றொட்டியாலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சம்பவதினம் மருதனார்மடம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணொருவரின் பணப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் பறித்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கூக்குரல் இட்டவாறே அவரை துரத்திச் சென்றுள்ளார்.

இதன் போது மருதனார்மடம் றொட்டியாலடி பகுதிக்கு அண்மையிலுள்ள மஞ்சள் கடவையை நெருங்கிய போது இளைஞன் ஒருவர் அவ்வீதியை கடந்துள்ளார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த குறித்த நபர் இளைஞனை மோதித் தள்ளியதில் விபத்து ஏற்பட்டது.

இதன்போது தனது மோட்டார் சைக்கிளை அவ் இடத்தில் விட்டுவிட்டு பெண்ணிடம் பறித்த பணப்பையுடன் இந்த நபர் வீதியால் வந்த வேறொரு வாகனமொன்றில் ஏறி தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை மீட்டதுடன் தெல்லிப்பழை வைத்தியசாலைக்குச் சென்று அவரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கைதான நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸ் காவலுடன் மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த விபத்தில் காயமடைந்து இளைஞன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.