யாழ் குடாநாட்டில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பாரியளவில் காணி மோசடிகள்

யாழ் குடாநாட்டில் போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை மோசடிகளில் ஈடுபடும் மோசடிக்காரர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

இவ்வாறு 50 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான காணிகளை விற்பனை செய்த மோசடிகள் தொடர்பாகக் கடந்த வருடத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

போலி ஆவணங்களை தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. அவற்றில் கடந்த வருடத்தில் 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய காணி விற்பனை மோசடிகள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குற்றவிசாரணைப் பிரிவிற்குக் கிடைத்துள்ளது.

இவ்வாறு மோசடியில் ஈடுபடும் மோசடிக்காரர்கள் இதற்காக பிரதான தந்திரமொன்றை கையாள்கின்றனர். முதலில் பிரதேசங்களில் நீண்ட நாட்களாக உரிமையாளர்களால் கவனிக்கப்படாது காணப்படும் காணிகள் தொடர்பாக அறிந்துகொண்டு கச்சேரிக்கோ அல்லது காணிகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய இடங்களுக்கோ சென்று காணியின் உரிமையாளர் முதல் காணி எல்லை வரை தகவல்களை அறிந்துகொள்கின்றனர்.

அதன் பின் அதன் உரிமையாளர் போல் போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்து காணிக்கு தேவையான போலி உறுதிப் பத்திரங்களையும் தயாரித்துக் கொண்டு அவசரமாக காணிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக விளம்பரப்படுத்தி காணியின் உண்மையான பெறுமதியை விட குறைந்த விலைக்கு விற்று பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிடுகின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சாதாரண மக்களைவிட படித்த ஆசிரியர்களும் வைத்தியர்களும் சட்டத்தரணிகளுமே அதிகமாக ஏமாந்துள்ளனர்.

இதனால் காணிகளை வாங்கும் போது பொதுமக்கள் அவதானத்துடனிருக்க வேண்டுமென தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இதன்படி புதிதாக காணியொன்றை வாங்கும் போது கட்டாயமாக சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

காணியை விற்பவரின் வதிவிடம், அவருக்கு காணியை விற்க வேண்டிய அவசியம், அவருக்கு காணி உரித்து எவ்வாறு கிடைத்தது. விற்கும் உரிமை என்பன தொடர்பாக சந்தேகமின்றி நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை காணியை வாங்கும் போது பூரணப்படுத்தப்படாத ஆவணங்களிலோ அல்லது வெற்றுப் பத்திரங்களிலே எக்காரணத்திற்காகவும் கையொப்பமிடக்கூடாது. அத்துடன் எழுதப்பட்ட காணி உறுதிப்பத்திரம் தமக்கு புரியாத மொழியில் எழுதப்பட்டிருந்தால் விசுவாசமான ஒருவரைக் கொண்டு அதனை வாசித்து அறிந்துகொள்ளவேண்டும்.

அத்தோடு காணியை விற்பவரோடு தொடர்பு கொள்ளும் போது முடிந்த வரை அவரின் நிலையான தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இது பிரச்சினை ஏற்பட்டால் அவரை அடையாளம் காண மிகவும் உதவும்.

மேலும் உறுதிப்பத்திரம் எழுதும் போது முடிந்தவரை நொத்தாரிசு அல்லது சட்டத்தரணியொருவரை பயன்படுத்துவதுடன் காணியை விற்பவரின் புகைப்படமொன்றைப் பெற்றுக்கொள்வதும் சிறந்தது.

கடந்த காலங்களில் இவ்வாறான மோசடிக்காரர்களினால் போலி ஆவணங்களைத் தயாரித்து காணி விற்பனை மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணி விற்பனை மோசடிகள் தொடர்பாக 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காணிப் பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடுகளை முன் வைப்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவினால்இ '1933' என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 24 மணித்தியாலமும் பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியுமென்றார்.

படத்தில் இருப்பவர் யாழ் குடாநாட்டில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பாரியளவில் காணி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதுடன் சுவிஸ் நாட்டில் இருந்து 80 இலட்சம் ரூபாய்களை போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை செய்தமைக்கான தரகுப்பணமாக பெற்றுள்ளமை உறுதிபடுத்தபட்டுள்ளதுடன் இவர் வடமராட்சி பகுதியில் நடமாடி வருகிறார் எனவும் தெரியவருகிறது.