யுவராஜ் சிங் எனது மூத்த சகோதரர் போன்றவர்: விராட் கோஹ்லி உருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் தனது மூத்த சகோதரர் போன்றவர் என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான விராட் கோஹ்லி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பேஸ்புக் பக்கம் மூலம் ரசிகர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது யுவராஜ் சிங் உடனான தொடர்பு குறித்து கோஹ்லி கூறுகையில், "நான் யுவராஜ் சிங் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அவர் என்னை வழி நடத்தியிருக்கிறார்.

அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவர் மீது எனக்கு எப்போதும் அதிக அளவு ஈடுபாடு உண்டு.

அவர் அற்புதமான மனிதர். அதுபற்றி யாருக்கும் அவ்வளவு தெரியாது. அவர் அதிக அளவு ஈர்ப்புடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அவரைப்பற்றி தவறான கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. ஆனால் அவர் கடின உழைப்பாளர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பெருமைக்காக அதிக அளவில் பாடுபட்டுள்ளார். அவருடன் டி20 தொடரில் விளையாடவிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசிய கோஹ்லி, “ஒரு கிரிக்கெட் வீரராக எனது முன்னேற்றத்திற்காக நான் கடினமாக உழைத்து வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். ஆடுகளத்தில் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன்.

கடந்தப் போட்டியில் 7000 ஓட்டங்களை அதிகவேகமாக கடந்த பெருமை கிடைக்கும் என்று நான் திட்டமிடவில்லை.

என்னுடைய திட்டம் எல்லாம் அதிக அளவு ஓட்டங்கள் குவிக்க வேண்டும், அதன்மூலம் அணிக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்பதுதான்“ என்று கூறியுள்ளார்.