யுவதி துஷ்பிரயோகம், இளைஞன் கைது

சிலாபம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 17 வயதான இளம் யுவதி எனவும் இது தொடர்பில் கைதாகியுள்ள சந்தேகநபர் 25 வயதான இளைஞர் எனவும் தெரியவந்துள்ளது.

தனது மகள் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த யுவதியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக, பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையில் சந்தேகநபர் தொலைபேசி மூலம் அழைத்ததன் பேரில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி அவரைச் சந்திக்கச் சென்றதாகவும், இதன்போது தன்னுடன் முரண்பட்ட நிலையில் அவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுவதி தற்போது வைத்தியப் பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரை சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.