இஞ்சி பயிர்ச் செய்கையால் யாழில் ஏமாற்றம்

யாழ்.மாவட்டத்தில் இஞ்சி பயிர்ச் செய்கையில் முதலீடு செய்தவர்கள் பெரும் ஏமாற்றத்துக்கும் பொருளாதார இழப்புக்கும் உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் இஞ்சிப் பயிர் செய்கையின் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணப்பாட்டுடன் பலர் முதலீடு செய்தனர். ஒவ்வொரு வரும் பல லட்சம் ரூபாவுவை செலவு செய்திருந்தனர். இஞ்சி அறுவடையின் போது கிலோ ஒன்று ஆயிரம் ரூபாக்கு குறையாத விலையில் விற்பனை செய்ய முடியும் என உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

உத்தேச அறுவடை ஆயிரத்தால் பெருக்கப்பட்டு வருமான மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இஞ்சியின் விலை கிலோ ஒன்று 300 ரூபாக்கு குறைவான விலையில் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் செய்கை பண்ணப் பட்ட இஞ்சிப் பயிர் உரிய முறை யில் வளர்ச்சி அடையவோ உரிய விளைச்சலைக் கொடுக்கவோ இல்லை என்றும் இஞ்சிப் பயிர் வளர்ந்து வரும் போது இடையில் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளது என்றும் இஞ்சிப் பயிர்ச் செய்கையில் முதலீடு செய்த பலர் யாழ்.மாவட்ட விவசாயத் திணைக்களத்தில் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக யாழ்.மாவட்ட விவசாயத் திணைக்கள பணிப்பாளர் கி.ஸ்ரீ.பாலசுந்தரம் தெரிவித்ததாவது:-

இஞ்சிப் பயிர்ச் செய்கையில் முதலீடு செய்பவர்களுக்கு விவ சாயத் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருந்தது. அவ்வாறு செய்ய விரும்பினால் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமிடத்து தற்பொழுது இஞ்சிப் பயிர்ச்செய்கைக்கு முதலீடு செய்த செலவில் 25 வீதமான செலவுடன் ஏற்பாடு செய்து தரப்படும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கொள்ளாமல் பலர் பெருமளவில் இஞ்சிப் பயிர்ச் செய்கையில் முதலீடு செய்து பொருளாதார இழப்புக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகி உள்ளனர் என்றார்.