யாழ்ப்பாண தேவா மீது கொலை வழக்கு!

இலங்கை அரசின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி காவல்துறை சார்பில் கோரப்பட்டது.

இதன்பேரில், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்குரைஞர் எம்.பிரபாவதி ஆஜராகி, சாட்சிகள் விசாரணையின் போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அல்லது உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று முன்பே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு நீதிபதி சாந்தி, வீடியோ கான்ஃபரன்சிங் வசதியை நீதிமன்றத்தில் செய்து தரக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டியுள்ளது.

அதன் பிறகு, டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதையடுத்து, போலீஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் வழக்கு விசாரணையை பெப்ரவரி முதலாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.