யாழ் காரைநகர் வாசி சாவு - நிமோனியா

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த காரைநகர்வாசி நிமோனியா காய்ச்சலாலேயே உயிரிழந்தமை உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து குறித்த நபரின் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த கார்த்திகேசு தவராசா (வயது -47) என்பவர் வவுனியாவில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் பணிபுரியும் முதலாளியிடம் சம்பளம் கேட்டபோது இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

அதனால் தவராசா தாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.அதனால் அவர் வவுனியாவில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதியிலிருந்து 2 நாள்கள் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின்னர் அவர் காரைநகருக்குத் திரும்பியுள்ளார். 

பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கிரியை நடக்கவிருந்த நிலையில் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அவர் தாக்கப்பட்டதனால் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதற்கான சம்பவமாக வவுனியாவில் உள்ள வர்த்தக நிலைய முதலாளிக்கும் இடையில் நடந்த சம்பவம் பற்றியும் பொலிஸாருக்குக் கூறப்பட்டதால் அவரது உடல், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தது.

நேற்று உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டபோது அவர் நிமோனியா காய்ச்சலாலேயே உயிரிழந்துள்ளார் என்று தமக்குக் கூறப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.