‘நல்ல வாழைப்பழம் வேணுமோ” - யாழில் யுவதிகளை கேவலமாக்கும் காவாலிகள்

‘பெண்கள் நமது கண்கள’; என்றார்கள். அது ஒரு காலம். இப்பொழுது அப்படி சொல்ல முடியாது. ‘பெண்கள் நமது பொழுதுபோக்கு’ என்றுதான் பல ஆண்களும் நினைக்கிறார்கள். தற்போது தமிழ்பகுதிகளில் அதுதான் நிலைமை.

கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் ஒருகாலத்தில் பெயர் சொல்லப்பட்ட இந்த மண்ணின் இன்றைய நிலை என்ன தெரியுமா? இன்று பெண்களால் வீட்டைவிட்டு ஒரு கிலோ மீற்றர் தாண்டி நடக்க முடியவில்லை. காரணம், கால்கள் வலிக்கவில்லை இதயம் வலிக்கின்றது. ஆண்கள்தான் இந்த நிலைமையை ஏற்படுத்தியவர்கள்.

பல பெண்கள் ஒரு இடத்தில் கூடும் பொழுது மேக்கப் பற்றியும், சமையல் பற்றியும், எதிர்காலம் பற்றியும்தான் பேசுவார்கள் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம்; படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும்போது எதை பற்றி மணிக்கணக்காக பேசுகின்றோம் தெரியுமா? ஆண்களே உங்களைப்பற்றி தான். இதில் பெருமைப்பட ஏதுமில்லை உங்களிற்கு.

வீதியில் செல்லும்போது யாராவது ஒரு பெண்ணை சீண்டிவிட்டு பெரும்பாலான ஆண்கள் செல்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் இதை கண்டும்காணாதது போல செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படியே போய்விடுவதில்லை. அவர்களின் மனதில் உள்ள ‘குற்றப்பட்டியலில்’ நீங்கள் இடம்பிடிக்கிறீர்கள். இன்னொரு தடவை எதிர்ப்படும்போது அவர்களால் உங்களை நிச்சயமாக அடையாளம் காண முடியும். அப்பொழுது இன்னொருத்தியிடம் ஒரு ரௌடியாகத்தான் உங்களை அறிமுகப்படுத்துவாள். அந்த இன்னொருத்தி மூலம் இன்னொருத்திக்கு என அது அந்த வட்டாரத்துக்கே பரவும்.

படிப்பு, வேலை என்று யாழ்ப்பாணத்தை சுற்றிவரும் பெண்கள் குழுவொன்று கடந்தவாரம் சந்தித்தபோது பேசிக் கொண்ட விடயங்கள் இவை. இதை நம்ப சிரமமாக இருந்தாலும், உங்கள் வீட்டு பிள்ளைகள் இதைத்தான் அனுபவிக்கிறார்கள்.

சந்தித்து ‘ஹாய்’ சொன்னதும் ஒருத்தி கேட்டாள் ‘எப்பிடி வந்தாய்? பஸ்சிலயா’ என. ‘ஆமாடி. பஸ்சில வந்திறங்கி நடந்து வாறன்’ என. ‘நடந்தா?… எப்பிடி இதுக்கால நடந்து வாறாய்? இதுக்கால நான் கொஞ்சநாள் நடந்து திரிஞ்சன். எப்படா சைக்கில் வாங்குவன் என்று வாங்கிற்றன். களைத்தாலும் பறவாயில்லை என்று சைக்கிளில் வரலாம். ஆனால் நடந்து மட்டும் வரக் கூடாதெடி. உதுவழிய கொஞ்சப் பேய்கள்; நிக்குதுகள். உதுகளுக்கெல்லாம் அக்கா தங்கச்சி இல்லையா? வீடுகளிலும் இப்படி தான் நடந்து கொள்ளுங்களா? எங்களை கண்டாலே கெட்ட கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசுறாங்கடி. அப்பிடியே செருப்பெடுத்து அடிச்சா என்ன என்று இருக்கும். அடிச்சிட்டம் என்று வை. அடுத்த நாள் இங்க உள்ள வெப் சைற் எல்லாத்திலயும் நாங்கதான் நியூஸ். அதுக்கு பிறகு வீட்டில உள்ளதுகள் நீ படிக்கவும் போக வேண்டாம், வேலைக்கும் போக வேண்டாம் என்று எங்கையாவது 10-20 வயசு கூடினதுகளை பார்த்து கட்டி வெளிநாட்டுக்கு அனுப்பிப் போடுங்கள். என்னடி வாழ்க்கை சா…. வெறுக்கிது’ என பொரிந்து தள்ளினாள்.

‘அன்றைக்கு நான் ரவுணுக்க நடந்து போய்ட்டு இருந்தன். ஒரு 50 வயசுக்கார கிழவன் பின்னால வந்தான். நானும் களைப்பில அதை கவனத்தில வைச்சிருக்கல. ரவுண் என்றால் நிறையப் பேர் நடந்து வருவினம்தானே என்று போய்ட்டு இருந்தன். பக்கத்தில் வந்து பேசக் கூடாத கேவலமான வார்த்தையால ‘எங்;கடி போற’ என்று கேட்டிட்டு போறான். எனக்கு உச்சி எல்லாம் வேர்க்க கோவம் வந்தது… ரவுன்ல இவ்வளவு பப்ளிக்ல இப்படி கேட்டிட்டு தெரியாதது போல போறான்டி’ என்று ஒருத்தி சொல்ல மற்றவள் தனது கதையை கொட்டினாள்.

‘அன்டைக்கு எனக்கும் இப்படிதான். லைசன்ஸ்க்கு பண்ணையடிக்கு போய்ட்டு பஸ்க்கு வந்திட்டு இருந்தன். ஒருத்தன் 30 வயசு இருக்கும். கேட்டான் ‘காசு எவ்வளவு றூமுக்கு’ என்று. அது மட்டுமில்லாம என்ன கேவலமா வர்ணிச்சிட்டு, ஆட்கள் வந்ததும் தெரியாதது போல போறான்டி. எனக்கு பயம் ஒரு பக்கம். அழுகை ஒரு பக்கம். அந்த நேரம் அம்மாவதான் திட்ட முடிஞ்சது. ‘இந்த நாட்டில ஏம்மா பெத்தாய்’ என. எப்படா லைசன்ஸ் எடுப்பன். எப்படா எப்பிடியாச்சு கஸ்ரப்பட்டு ஒரு பைக் எடுப்பன் என்று இருக்குதடி’ என கண்கலங்கினாள்.

‘பஸ் ஏறினால் றூமுக்கு போக 7 மணி ஆகிடும். பஸ்ஸால இறங்கி நடந்து போக எங்கட றோட்டில ஒரு அங்கிள்ஸ் கூட்டம் நிக்குங்;கள். எல்லாம் தண்டச்சோறு வெட்டிகளாகத்தான் இருக்கும்.

‘இதுகள் எல்லாம் அவிட்டு விட்ட மாடுகள். எங்க மேஞ்சிட்டு வருதுகளோ’ என்று சொல்லுங்கள். நான் வெளிமாவட்டம். கேட்க ஆட்கள் இல்லை என்ற தைரியம். ஒருநாள் நான் றூமுக்கு போய் அழுதிட்டு இருக்க, றூம் அன்ரி என்னாச்சுமா என்று கேட்டா. ‘இப்படி சொல்லினம் அன்ரி. எனக்கு கவலையா இருக்கு. நாங்கள் எல்லாம் கஸ்ரம் என்றதாலதானே இப்படி வேலைக்கு போய் உழைக்கிறம். வேலையால வர சில நேரம் பிந்திடுது. அதுக்கு தங்கட பிள்ளையலா இருந்தா இப்படி கதைப்பினமா. நாங்க எந்த தப்பும் செய்யாம இப்படி வார்த்தைகளை கேக்க வேண்டி இருக்கே’ என்று அழுதன். அன்ரி எனக்கு ஆறுதல் சொல்லிட்டு அங்கிளிட்ட சொல்ல, அவர் சொன்னார் ‘உதுகளோட சண்டை பிடிக்க முடியாதும்மா. கேக்கப் போனா இன்னும் ஏதும் தேவையில்லாம கதைக்குங்கள். நீங்க வரும்போது போனில் பாட்டு போட்டு கெற்போன் கொழுவிற்று கேக்காத மாதிரியே வாங்க’ என இன்னொருத்தி தனது கதையை சொன்னாள்.

அதற்கிடையில் மற்றவள் ‘இந்த காவாலியள் பஸ்சுக்கயும் வருங்கள். அன்டைக்கு பஸ்ஸில நானும் அன்ரியும் கொஸ்பிற்றலுக்கு போனம். ‘கொஸ்பிற்றல் இறக்கம்’ என்று சொல்ல பக்கத்தில் நின்டவன் ‘ஏன் மாசமா’ என்று கேட்டான். நான் திரும்பி முழுசி பார்க்க அங்கால திரும்பி நிக்கிறான். பொதுவா பேசிறது போல அன்ரி நல்ல பேச்சு குடித்தா. ‘வீட்டில அம்மாவ போய் கேள்; சொல்லுவா’ என்று. பேசாமல் பின்னால போயிற்றான்’.

இப்படி பேசிக் கொண்டிருக்க, மற்றவள் சொன்னாள், ‘ரவுணுக்க உள்ள கடைக்காரர் நல்ல வாழைப்பழம் இருக்கு, வாங்க சாப்பிடலாம், வடை சாப்பிட்டு போங்க, ரீ சோட குடிச்சிட்டு போங்க என்று வழி மறிக்கிறாங்கள். விலத்தி போனால் எதாவது கேவலமான வார்த்தைகளால சொல்லுவாங்கள்’.

அரைமணி நேரத்தில் இப்படி கொட்டித்தீர்த்தார்கள் அந்த பெண்கள். இதன்மூலம் நமது பகுதிகளில் நடக்கும் பெண்களிற்கெதிரான வன்முறையின் அளவு, பெண்கள் தொடர்பான ஆண்களின் மோசமான பார்வை என்பன வெளிப்படுகின்றன. இது ஆபத்தான போக்கு. முன்னர் ஒருகாலத்தில் நள்ளிரவிலும் பெண்கள் பயமின்றி வெளியில் செல்லும் நிலையிருந்தது.

இதன்மூலம் என்ன புரிகிறதென்றால், இப்படியான ரௌடிகளிற்கு அந்த இடத்திலேயே தண்டனை கொடுக்க வேண்டும். பெண்களின் கருத்துப்படி இப்படி ரௌடித்தனம் செய்வது வெட்டியாக உள்ள 35 வயதை கடந்தவர்கள்தான். வேறுயாரையோ அண்டிவாழும் இவர்கள், குடித்துவிட்டு, பெண்களுடன் சேஷ்டை விடுவதையே வாழ்க்கையாக நினைக்கிறார்கள். இயல்பான சமூகஓட்டத்திற்கு இப்படியான சமூகவிரோதிகள் தடையாக உள்ளனர்.

இவர்களை யார் கட்டுப்படுத்துவது?