40 ஆயிரம் பாடல்கள் பாடிய பாடகி பி.சுசிலாவுக்கு தங்க கங்கனம்

மறைந்த தெலுங்கு நடிகர் சோபன்பாபுவின் 80–வது பிறந்தநாள் விழா ஐதராபாத்தில் நடந்தது.இவரது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ருதியலா ஆர்ட் அகாடமி சார்பில் சிறந்த திரையுலக கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. விழாவில் அவருக்கு ‘தங்க கங்கனம்’ அணிவிக்கப்பட்டது. தெலுங்கானா மேல்சபை தலைவர் சுவாமி சவுரு இதனை வழங்கினார்.

விழாவில் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–பாடகி பி.சுசிலா பல்வேறு மொழிகளில் இதுவரை 40 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். பாடுவதற்கே பிறந்தவர் அவர். தேன் குடித்தது போல் அவரது குரல்வளம் மக்களை மகிழ்விக்கிறது. அனைத்து மாநில மக்களுக்கும் அவர் சொந்தமானவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பி.சுசிலா பேசியதாவது:–இப்போது ஏராளமான பாடகர்கள் உருவாகி வருகிறார்கள். சிறிய குழந்தைகள்கூட திறமையாக பாடுகிறார்கள். இளம் பாடகர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்ட பல மேடைகள் இப்போது உள்ளது. ஆனால், எனது காலத்தில் இத்தகைய வாய்ப்புகள் இல்லை.இளைய பாடகர்களுக்கு நான் வழிவிடுகிறேன். நான் உயிருள்ளவரை பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடவுள்தான் அதற்கு அருள் புரிய வேண்டும்.

இவ்வாறு பி.சுசிலா கூறினார்.