ரசிகர் மன்ற பதவிகள் விற்கப்படும் – தனுஷைக் கிண்டல் அடித்த ரசிகர்கள் !

சென்னையில் தனுஷ் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.

சென்னை முழுவதும் இன்று காலையில் இருந்து ஒட்டப்பட்டுள்ள புதுப் போஸ்டர்களால் புது சர்ச்சைகள் உருவாகியுள்ளது. காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் தனுஷையும் அவரது ரசிகர் மன்றங்களையும் விமர்சனம் செய்யும் விதமாக சிலக் கேள்விகள் ரசிகர்களால் எழுப்பப்பட்டுள்ளன.

1.தனுஷ் மன்றத்தில் உழைக்கிறவர்களுக்கு பதவிகள் கிடையாது.

2.பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுக்கப்படும்.

3.வருடத்துக்கு ஒரு முறை பணம் கொடுத்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

4.ரஜினி சார் கட்சியைத் தவிர மாற்றுக் கட்சியில் உள்ளவர்களுக்கு தனுஷ் சார் ரசிகர் மன்றத்தில் இடம் இல்லை”

5.பதவி பெற்றவர்கள் தனுஷ் பிறந்தநாளுக்கு 100 நாட்கள் முன்னரே விளம்பரம் செய்யவேண்டும்

6.ரசிகர்கள் போட்டோ எடுக்க கோவில்பட்டி வரவேண்டும்.

எனப் பல காரணங்களை சொல்லி குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அதில் அகில இந்திய தனுஷ் ரசிகர்கள் மன்றத் தலைவர் இயக்குனர் சுப்ரமன்ய சிவா என்றும் செயலாளர் டச்சப் ராஜா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் மன்றத்தில் இருந்து சில உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக் காரணமாக நீக்கப்பட்டனர். மேலும் சிலர் உண்மையான  ரசிகர்களை விட பணம் படைத்தவர்களுக்கும் புகழ் வாய்ந்தவர்களுக்குமே பதவிகள் வழங்கப்படுவதாக  குற்றச்சாட்டை வைத்தனர். இந்த நிலையில் போஸ்டரால் தனுஷுக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.