நாய்களின் காப்பகத்தைக் கூட ஸ்தாபிக்கத் திறனற்றதாக செயற்பட்ட வடக்கு மாகாணசபை! சி. தவராசா

வடக்கு மாகாண சபையினால் 5 வருடங்களாக செய்ய முடியாதிருந்த காரியத்தினை சிவபூமி அறக்கட்டளை நிலையத்தினால் திருமுருகனின் வழிகாட்டலில் நிறைவேற்றியிருக்கின்றது என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.

வடக்கின் முன்னாள் முதலமைச்சர், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற முறையில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பான பிரச்சினைக்கு உள்ளூராட்சி ஆணையாளர், செயலாளர்களை அழைத்து பல கூட்டங்களை நடத்தியதுதான் 5 வருடங்களாக அவர் சாதித்த சாதனையாக உள்ளது.

சிவபூமி அறக்கட்டளை நிலையத்தினால் இதனை சாதிக்க முடியும் என்றால் ஏன் உள்ளூராட்சி மன்றங்களை நெறிப்படுத்தக் கூடிய நிலையில் அன்றிருந்த முதலமைச்சரினால் சகல உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி அவர்களை நெறிப்படுத்தி மாகாணசபையின் அனுசரணையுடன் இவ்வாறான ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது போனது.

இது முழுக்க முழுக்க மாகாண சபையினதும் உள்ளூராட்சி சபைகளினதும் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு விடயம்.

இவ்வாறான சிறு வேலைத்திட்டங்களை கூட செய்ய திறனற்றவர்களாக மாகாணசபையில் இருந்துவிட்டு எமது பிரதேசத்திற்குக் கூடிய அதிகாரங்கள் வேண்டும் என்றும் சமஸ்டி அதிகாரங்கள் வேண்டும் என்றும் பேசிக்கொண்டிருப்பதில் பலனேதும் இல்லை.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக கனவு காண்கின்றனர். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை கலாநிதி ஆறு திருமுருகன் நிரூபித்து கொண்டிருக்கிறார்.

தனி மனிதனாக நின்று பல மக்கள் நலன்சார் செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடத்திவரும் திருமுருகனின் நாய்கள் காப்பகம் திட்டமும் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துக்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.