யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகள்....கல்லூரி துணைவேந்தர் வெளியிட்ட உண்மைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் புதுமுக மாணவிகள் மீது மூத்த மாணவர்கள் சிலரால் பாலியல் சீண்டல்கள் இடம்பெற்றன என வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளாரல் அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த தகவலை துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த 6 ஆம் திகதி கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. அன்றைய தினம் புதுமுக மாணவிகள் சிலர் மீது மூத்த நிலை மாணவர்கள் சிலர் பாலியல் சீண்டல்களை முன்னெடுத்தனர் என செய்திகள் வெளியாகின.

அது ஊடகங்களில் வெளியாகியதையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஊடக அறிக்கையை விடுத்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 06.04.2019 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக 07.04.2019 அன்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளது.ஊடகங்களில் வெளியான இந்த விடயம் தொடர்பான தகவல்கள் பாலியல் தொந்தரவு பற்றியது என்பது உண்மைக்குப் புறம்பானது.

இந்தச் சம்பவம் மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடு பற்றியதே என்பதையும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்துகின்றது என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.