ஜீவாவுடன் மீண்டும் இணையும் ஆர்யா

ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ஆர்யா. அதன்பிறகு, ஆர்யா நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவா ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள்.

ஆர்யா நடிப்பில் கடந்த வருடம் ‘இஞ்சி இடுப்பழகி’ படம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவா இயக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை ஜீவாவின் ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன்மூலம், ஆர்யாவும், ஜீவாவும் மீண்டும் இணையவுள்ளனர்.இப்படம் முழுக்க முழுக்க வனப்பகுதிகளுக்குள் படமாக்கப்படுகிறது. இதற்காக கேரளா, பாங்காக் ஆகிய இடங்களில் உள்ள காடுகளை படக்குழுவினர் பார்வையிட்டு படப்பிடிப்பு நடக்கும் இடங்களை உறுதி செய்துள்ளனர்.

காடுகளில் படமாக்கப்படுவதால், ‘பேராண்மை’ படத்தில் காடுகளில் திறமையாக கேமராவை கையாண்ட ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு தற்போது நடைபெறவிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.