மம்முட்டியுடன் பணிபுரிவது பெரிய ஆசீர்வாதம்: இயக்குனர் ராம்

‘தங்கமீன்கள்’ படத்திற்கு பிறகு ராம் ‘தரமணி’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்த படம் இன்னும் வெளிவராத சூழ்நிலையில், மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து ‘பேரன்பு’ என்ற படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார்.இப்படத்தில் மம்முட்டியுடன் அஞ்சலி மற்றும் ‘தங்கமீன்கள்’ படத்தில் நடித்த சாதனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மெகா ஸ்டார் மம்முட்டியை இயக்குவது குறித்து ராம் கூறும்போது, என் இயக்குநர் பாலுமகேந்திரா பிரியத்துடன் ‘மம்மூ’ என்று அழைத்த, மற்றவர் ‘மம்முட்டி‘ என்றும், ‘மம்மூக்கா’ என்றும், நான் ‘சார்’ என்றும் அழைக்கிற பரிபூரணமான நடிகருடன் பணிபுரிவது எத்தனைப் பெரிய ஆசீர்வாதம் என்பதைக் கடந்த 7 நாட்களும் உணர்ந்தபடியுள்ளேன்.

விழித்திருக்கிற அனைத்து நேரமும் திரைப்படங்களைப் பார்க்க, பேச, நடிக்க என்றிருக்கும் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். ‘பேரன்பு’ வளர்ந்துகொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஸ்ரீராஜலெட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.