எம்.ஜி.ஆர். பாடலுடன் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் பெரிய ஹிட்டானதையடுத்து, இப்படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசிய ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற வசனத்தை தலைப்பாக வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வரும் வேளையில், இப்படத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்யப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த பாடலை படத்தில் ஜி.வி.யின் அறிமுகமாக பாடலாக வைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். இந்த பாடலை ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற நடன அரங்கு போன்று பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் சென்னை ஏரியா பையனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் இப்படம் உருவாகவிருக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற 20-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.