யாழில் இராணுவம் நிதி சேகரிக்கவே இல்லை - கட்டளை தளபதி ஹெட்டியாராச்சி அறிக்கை

இந்து ஆலயங்களை புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலை திட்டத்துக்கும்  யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படுவதாக இல்லை என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பலாலியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சீருடை அணிந்த இராணுவத்தினரால் சுன்னாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிதி சேகரிக்கப்படுவதாக  ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதை மறுத்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

இவரின் அறிக்கை வருமாறு:-

இந்து ஆலயங்களை புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலை திட்டத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படுவதாக இல்லை, மாறாக தென்னிலங்கை மக்களிடம் இருந்து கிடைக்க பெறுகின்ற நிதி பங்களிப்புகள் மூலமாகவே எமது மனித நேய வேலை திட்டங்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் இராணுவத்தினரால் ஆலய புனரமைப்புக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் நிதி சேகரிக்கப்படுவதாக வெளியாகி உள்ள செய்தி எம்மை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. யாழ். மாவட்ட தளபதி என்கிற வகையில் நாம் அறிந்த வரையில் நிச்சயமாக இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் கிடையாது.  ஏனென்றால் அந்த மாதிரியான நிதி சேகரிப்புக்கு எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நாம் உத்தரவிடவே இல்லை.

எது எப்படி இருந்தாலும் இராணுவத்தின் பெயரை பயன்படுத்தி எவரேனும் யாழ். மாவட்டத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்ற பட்சத்தில் உடனடியாக யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்துக்கு தெரியப்படுத்துமாறு வேண்டி கொள்கின்றோம். அத்துடன் இவ்வாறான செய்திகள் கிடைக்க பெறுகின்றபோது இராணுவத்தின் யாழ். கட்டளை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உண்மையை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு ஊடகவியலாளர்களை கேட்டு கொள்கின்றோம்.