மனைவியை அழைத்துவருமாறு கணவன் மன்றாட்டம்

குவைத் நாட்டில் பணிபுரிந்துவரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு  நுவரெலியா, நானுஓயா லென்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிக்குமார் என்பவர், முகவர் நிலையத்தை கோரியுள்ளார். மேற்படி நபரின் மனைவியான வனிதா (வயது 26) என்பவர், கணவரின் பாதுகாப்பில் தனது இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, ஹட்டனிலுள்ள முகவர் நிலையமொன்றினூடாக 2015 மார்ச் 13ஆம் திகதியன்று பணிப்பெண்ணாக குவைத்துக்குச் சென்றுள்ளார்.


அங்குச் சென்ற அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தனது கணவரிடம் தெரிவித்ததை அடுத்து, மேற்படி நபர் முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.   இவ்விடயத்தை முகவர் நிலையம் கவனத்திற்கொள்ளவில்லை என்றும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வராவிட்டால் தான் முகவர் நிலையத்துக்கு முன்பாக தீக்குளிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக முகவர் நிலையத்தின் முகாமையாளர் என்.பாஸ்கரிடம் வினவியபோது,  மேற்படி பெண்ணை தான் சட்ட ரீதியாக வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் இரண்டு வருடங்களுக்கு  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால்  அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியாது எனவும் கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாத சசிக்குமார், தனது மனைவிக்கு வழங்கவேண்டிய  சம்பள பணத்திலாவது விமான பயணச் சீட்டைபெற்றுக்கொடுத்து அவரை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு கோரியுள்ளார்.