யாழில் தனியார் கல்வி நிலையமும் பெற்றோர் படும் பாடும்

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாடக் கற்கை நெறிகள் நடைபெறுகின்ற பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் அது. யாழ்ப்பாணத்தில் பிறவுண் வீதியில் உள்ள இந்தக் கல்வி நிலையத்தில்  2017 உயர்தரப் பிரிவில் மட்டும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயிலுகின்றனர். இந்தப் பிரிவில் வகுப்புகள் தினமும் நிறைவடைய வேண்டிய நேரம் மாலை 5.15 ஆகும். ஆனால் இதில் ஒழுங்கான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. வகுப்புக்கு அரைமணிநேரம் பிந்தி வருகின்ற ஆசிரியர் அரைமணிநேரம் பிந்தி வகுப்பை நிறைவு செய்யும் நிலைமை கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.

இதனால் யாழ் மாவட்டத்தின் தொலை தூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தருகின்ற மாணவிகள் இருள் சூழ்ந்த வேளைகளில் அச்சத்துடன் பேருந்துகளைத் தேடி ஓடும் நிலை உள்ளது. உரிய பேருந்தைத் தவறவிட்டு விட்டால் அடுத்த பேருந்துக்காக இரவு 8 மணி வரை கூட காத்திருக்க வேண்டிய அவலம். பெற்றோர்களின் மனநிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எத்தனை அவசர தொலைபேசி அழைப்புகள்? எவ்வளவு அங்க லாய்ப்புகள்?

கடந்த புதன்கிழமை (2016.01.13) பி.ப. 3 மணிக்கு இரசாயனவியல் பாடத்தில் பரீட்சை நடைபெறும் என்பது அறிவித்தல். எனினும் மாலை 4.15 மணிக்கே வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. ஊழியர்களின் அசமந்தப் போக்கே காரணம். இதனால் மாலை 6.15 மணிக்கே பரீட்சை நிறைவு பெற்றது. இதனால் பெண்பிள்ளைகள் வீடு போய்ச் சேர்வதில் பட்ட சிரமங்கள், பதற்றங்கள் சொல்லும் தரமன்று. 

இரவு 8மணிவரை பயத்துடன் பேருந்தை எதிர்பார்த்துக் காத்து நின்ற பெற்றோர்கள் எண்ணற்றவர்கள். அவர்களின் அங்கலாய்ப்புக்கள் கொஞ்சமல்ல. இந்தக்கல்வி நிலையத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கக்கூடும். இருப்பினும் காசே கதியாகச் செயற்படும் இவர்களுக்கு ஏனோ இந்தப் பிரச்சினை விளங்குவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களாவது இதில் அக்கறை கொண்டு வகுப்புகள் நிறைவடையும் நேரத்தை சீர்செய்ய வேண்டும் என்பதே பெற்றோரின் வேண்டுகோள் ஆகும்.