இலங்கை வீரர்களின் போதை ’பார்டி’ எதிரொலி: இந்திய வீரர்கள் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல தடை

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி வீரர்கள் அங்கு மதுவிருந்தில் விடிய விடிய குடித்து கும்மாளம் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ஹேரத், குஷால் பெரேராவை சூதாட்ட தரகர் தொடர்பு கொண்டது குறித்தும் விராசணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி வீரர்கள் சூதாட்ட விடுதிக்கு செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளது.

அதில் இந்திய வீரர்கள் யாரும் சூதாட்ட விடுதிக்குச் செல்ல வேண்டாம். அங்கு சில விரும்பத்தகாத நபர்களை சந்திக்க நேரிடலாம்.

இதனால் தர்மச் சங்கடத்திற்கு உள்ளாக நேரிடலாம் என்பதால் இந்த தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களது நாட்டு வீரர்கள் மீது கவனமாக இருக்கிறது. இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.